ஆணுக்கும் மாதவிடாய்
என் மாதவிடாய் வலியை காணப்பொறுக்காமல் இரக்க முகத்தோடு என்னையே பார்த்து நின்றிருந்தான். எழுந்து நடந்து, அவரை அணைத்துக்கொண்டு 'எனக்கு ஒன்றுமில்லை' என சொல்லத்தான் ஆசை. ஆனால் என்னால் நகர முடியவில்லையே. அடிவயிற்றில் நங்கூரமிட்டு இழுப்பது யாரோ.. அசைய மறுத்து கிடக்கிறேன் நானே.. இன்றோடு திருமணமாகி முப்பத்தி இரண்டாம் நாள், இதுவரையில் வீடு முழுக்க சுற்றி சுற்றி ஓடியவளையும் வம்பிழுத்து வாயாடி கொண்டிருந்தவளையும் என் கணவன் தேடிக்கொண்டிருந்தான். இதை வாயால் சொல்லும் முன்பே கண்ணால் பேசிவிட்டான். இதுவரையில் இல்லாத நானாய்.. அவனுக்கு இப்போது 'புதிதான நான்'. இந்த ரத்தம் அவர் நுகரும்படியாகவும், வலி அவர் உணரும்படியாகவும் நெருக்கத்திலே இருந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கால்களை இறுக்கிக்கொண்டு நான் படுத்திருக்கையில், கையோடு எனை தூக்கி மார்போடு சாய்த்து மடியோடு வைத்திருந்தான். என் யோனி அவன் மடியிலே இருந்தது. அந்த நாட்கள் முழுவதுமாய் என் ஆணுக்கும் மாதவிடாய் . என்னோடு அசையவே மறுத்திருந்தான்.