நிறைவு நாளின் நினைவாக..
ஆபீசுக்கு வந்து சேர்ந்த கதிர், யாரிடமும் புன்னகையை கொடுக்கவும் இல்லை; வணக்கத்தை பெற்றுக் கொள்ளவும் இல்லை. அவசர அவசரமாக இருக்கைக்கு வந்தான்.
என்ன சார்! இன்னிக்கு ரொம்ப லேட்டா.. அட்டெண்டன்ஸ் ல கூட கையெழுத்துப் போடல வந்து நின்றான், பியூன்.
ஆமாய்யா.. லேட், டென்சன்.. கையெழுத்திட்டுக்கொண்டே
சொன்னான்.
அவன் போக மறுபுறம் அலைபேசி 'உயிரே உயிரே உயிர் நீதான் என்றால்' 'உடனே வருவாள்'.. என ஒலியெழுப்ப ராட்சசி வந்துட்டா என பொத்தானை அழுத்தி கனத்த குரலில்,
`சொல்லு´ என்றான்.
அந்தப் பக்கத்திலிருந்து.. `சாரி டா´!
இருக்கட்டும், சாயந்தரம் வந்து உன்ன பேசிக்கிறேன். நான் வரும்போது நீ மூணு வேளையும் சாப்பிட்டு ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கி எழுந்திருக்கணும். சண்டையை நெனச்சு கண்ண கசக்கிட்டு மூலையில இருந்தா அப்படியே நான் வெளியில போயிடுவேன்டி, போனை வைக்கிறேன்.
என்னய்யா! காலையிலேயே எள்ளா வெடிக்கிற, இது சக தொழிலாளி நல்ல நண்பனின் குரல்.
வேற என்ன வீட்டம்மா தான்டா.. இன்னையோட நாங்க காதலிச்சு நாலு வருஷம் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம்..
ஆக ஐந்து வருஷ நிறைவு நாள்.
இது சந்தோஷம் தானடா! குழப்பத்தோடு நண்பன்.
ஆமா! ரொம்ப சந்தோஷம் தான்.. அவளுக்கு ரெண்டு நாளா உடம்புக்கு சுகமில்ல, இப்போதான் கொஞ்சம் நல்லா ஆச்சு..
விசேஷ நாள் அதான் சாம்பார், ரசம், மோர் குழம்பு, எக்ஸ்ட்ராவா மூன்று வகை கூட்டு, பொரியல், அப்பளம். இனிப்புக்கு பாயசம், கேசரி.
வடை இல்லாம விசேஷமாகுமா! உங்களுக்கு பிடிக்கும்னு ரவாலட்டு பிடிச்சு வச்சிருக்கேன். சாயந்தரம் நீங்க வரும் முன்னமே அதிரசம் செஞ்சு வச்சுடுறேன்.......
இதெல்லாம் சொல்லி காலையில காபியோடு என் முன்னே நிற்கிறாள்டா.
இந்த காலத்துல எந்த பொண்ணு டா இப்படி இருக்கும். அப்படிப்பட்ட பொண்ணு மேல ஏன் உனக்கு இவ்வளவு கோபம்!
நன்றாய் உரைக்க கேட்டான் நண்பன்.
தெரியும்டா.. ஆனந்தி அப்படியே என் அம்மா மாதிரி பாசத்துல, குணத்துல, நடத்தையில.. `நான் ஒரு அம்மாவை இழந்ததே போதும்´.
ஆனந்திக்கு என் மேல இருக்கிற அக்கறையில அரை பங்கு கூட அவளோட உடல்நலத்துல இல்ல, அதான் அதட்டி நடத்துவேன்.
போகப் போக சரியாப் போகும் டா.. கவலைப்படாத! வேலையை பாரு.
ம்ம்.. சரி.
ஆகாயத்திலிருந்து சூரியன்
கீழிறங்கி போனபின்,
கதிர் வீட்டின் படிக்கட்டேறினான்..
உள்நுழைந்ததும் 'குட்டிமா'! என்றான்.
அடுப்பறையில் இருந்து..
'இங்க இருக்கேன்' என்றாள்.
அடுப்பை துடைத்துக்கொண்டு நின்றவளை, பின்னிருந்து ஆரத்தழுவி காது மடலின் பின்னே, அவன் சுவாசம் கூசும்படியாக பெருமூச்சுடன் முத்தமிட்டான்.
சிலிர்த்து பட்டென திரும்பியவளின் பார்வையில், பட்டுப்போன உணர்வெல்லாம் பூரித்தது.
அன்று இரவு படுக்கை இரைந்து..
விடியல் பிறக்கையில்,
அவன், அவள், கதைக்கு புது 'கரு'
மூவராய் தூங்கி எழுந்தனர்.
நிறைவு நாளின் நினைவாக கிடைத்தது குழந்தை பரிசு..
Comments
Post a Comment