பட்டாம்பூச்சி ஓட தொடங்கியது, அதனோடு துரத்தத் தொடங்கினாள்.. தோட்டத்து வரப்பும், வாய்க்கால் வனப்பும் தாண்டி துரத்தினாள். மணற் கால் புழுதிகளோடே சீரும் சிறுத்தையின் தோரணையோடே பட்டாம்பூச்சிக்கான வேட்டை அது! முக்கால் காலை மறைத்திருந்த தாவணியை, முட்டிக்கு இழுத்துக்கொண்டு தடதட ஓட்டம்.. காலில் செருப்பில்லாதது கவலையுமில்லை; வயிற்றில் சோறில்லாதது வலியுமில்லை; தலையில் எண்ணெயில்லாதது சிக்கலுமில்லை; பண்ணையார் வீட்டில் பத்தாது கொடுத்த பாவாடை தாவணியில் உடல் பொருந்தவுமில்லை; இதையெல்லாம் அவள் பொருட்படுத்தவுமில்லை. குறிக்கோள், உயர இருந்த பட்டாம்பூச்சி தான். தூரப்பயண களைப்பில் காகிதப்பூ தாவரத்தில் மூச்சு வாங்கி ஆற அமர்ந்தது, பட்டாம்பூச்சி. சொடுக்கும் நொடியில், படபடத்த றெக்கை அவள் விரல்களுகிடையில், வெற்றியை கை கால் உதறியபடி சிரிப்பு சத்தம் முழங்க கொண்டாடினாள். உண்மையில் பல பதக்கங்களை பிடிக்க வேண்டிய விரல், பட்டாம்பூச்சியை வைத்துக்கொண்டு இம்புட்டு பகுமானத்தில்.. அவள் மட்டும் பள்ளிக்கூடம் போயிருந்தால், விளையாட்டை அறிந்திருந்தால், மைதானம் கண்டிருந்தால், ஆளுக்கு முன் பிடித்திருப்பாள் பல கோப்பை...